செவ்வாய், 22 செப்டம்பர், 2015

யாழ்ப்பாண நூல் நிலையத்திறப்பு விழாவுக்கு முன் நடைபெற்ற சம்பவம்!

சேதமடைந்த நூல் நிலையம் சந்திரிகா அரசினால் மீள புனரமைக்கப்பட்டு 14.02.2003ஆம் திகதி திறக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்ட நிலையில் 12ஆந்திகதி நூல் நிலையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து 13ஆந்திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவி விலகியதுடன் நூல்நிலையத் திறப்பு விழாவும் இரத்துச் செய்யப்பட்டது! 13ஆந்திகதி நள்ளிரவு நூலகத் திறப்புகளும் காவலாளிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டன. 2003.02.14 பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின் பிரதான வாசலில் மும்மொழிகளில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் (7 வருடங்களின் பின் 2010இல் பொருத்தப்பட்டது) பொய்யான செய்தி. வரலாற்றை ஆராய மூலமாக இருக்கும் நூலகத்தில் பிழையான பதிவு இருப்பது சரியா? இது உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

கடந்த 13.02.2003 வியாழக்கிழமை காலையில் நானும் ஏனைய உறுப்பினர்கள் முதல்வர் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பொதுநூல் நிலையம் திறப்பது சம்பந்தமாக உரையாடி நாம் வெளியேறிய சமயம் இரண்டு கிராமசேவகர்கள் முதல்வர் அலுவலகத்தினுள் சென்று அமர்ந்தனர். ஒருவர் சந்திரசேகரம், மற்றவர் நவரட்ணராஜா. இவர்களில் ஒருவர் முதல்நாள் முதல்வரிடம் வந்து இந்த திறப்புவிழாவை பிற்போடுமாறு கேட்ட திரு. சிறில், திரு. கஜேந்திரன் ஆகியோருடன் வந்தவர். நாம் எங்களுடன் அப்பொழுது கதைக்கலாம் என்றபோது மறுத்ததுடன் அன்று 12.02.2003புதன்கிழமை மாலை 5.00மணிக்கு முடிவைத் தெரிவிக்குமாறு கூறிச் சென்றவர்கள்.

“இவர்கள் இருவரும் ஏன் இங்கே நிற்கிறார்கள் - வெளியே போகச் சொல்லுங்கள்” என முதலில் முதல்வரிடமும் உறுப்பினர்களிடமும் கூறி பின் முதல்வரின் செயலாளர் திரு. பூலோகரட்ணத்திடமும் கூறினேன். அனைவரும் எப்படிக் கூறுவது என்று மறுக்க நானே நேரடியாக அவர்களை வெளியே போகுமாறு வேண்டினேன். அவர்கள் தாம் முதல்வரைச் சந்திக்கவிருப்பதாகவும் எனக்கு இது தேவையில்லாத விடயமெனவும் - மேலும் தாம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் கிராமசேவகர்கள் எனவும் நான் வெளியாள் எனவும் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமுற்று உரத்த குரலில் கடந்த 5 வருடங்களாக இந்த மாநகர சபை உறுப்பினராக இருந்த மூளாய் - வலிகாமம் மேற்கைச் சேர்ந்த என்னை இன்றுதான் வெளியாள் என்று தெரிகிறதோ? நாம் ஆரம்பத்தில் மாநகர சபைத் தேர்தல் காலங்களில் திருமதி. யோகேஸ்வரன், திரு. திருமதி. சிவபாலன் ஆகியோருடன் உடன் வந்தவன். அந்த நேரங்களில் உங்களைக் காணவே கிடைக்கவில்லை என்று பல கடந்த கால விடயங்களைக் கூறி இப்போது நாம் நூல் நிலையம் சம்பந்தமாக முடிவு செய்ய வேண்டிய நிலையிலிருப்பதால் நாம் வேறு விடயங்களில் தலையிட முடியாது வெளியே போங்கள் - தஙவுசெய்து என்று கூறி இறுதியாக வெளியே போ என்று சத்தமிட்டேன். இந்நேரம் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் திரண்டு கூடியிருந்தனர். இவர்களிருவரும் தம்மை முதல்வர் கூறினால்தான் வெளியே போவோம் என்று கூறியதைத் தொடர்ந்து, நான் முதல்வரை அவர்களைச் சந்திக்க முடியாது போங்கள் என்று கூறி வற்புறுத்தவே முதல்வரும் அவ்வாறு கூறியதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற நான் முதல்வரை அவரது அலுவலகத்தினுள் போகுமாறு தெரிவித்து நானும் உள்ளே சென்றேன். நூலகம் ஆரம்பகாலத்தில் பகுதிபகுதியாக திறப்பித்த நிகழ்வுகளை அறிந்திருந்ததால் அறிக்கை ஒன்றை தட்டச்சு செய்வதற்காக தட்டெழுத்தாளர்கள் இருக்கும் பகுதியினுள் சென்று அவர்களுடன் இதுபற்றிய செய்தியை சுருக்கெழுத்தாளரிடம் கூறி குறிப்புக்களை விளக்கமாக அவர் எழுதும்படி அவருக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் முதல்வருடன் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி வந்து அளவளாவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன. நான் எனக்கு இது தேவையில்லை நாங்கள் எமது பணியை மேற் கொள்வோம் என்றுகூறி அந்தப் பகுதியிலிருந்தபடி சில குறிப்புக்களை எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்போது உறுப்பினர்களின் கூடத்திலிருந்து திரு. சுபத்திரன் என்னை அழைப்பதாக ஒரு ஊழியர் வந்து தெரிவித்ததும் நான் அந்த இடத்திற்குச் சென்றேன். அப்போது திரு. சுபத்திரன் அவர்களுடன் மேலும் பல உறுப்பினர்கள் உடனிருந்தனர். “முதல்வர் தனியாக இருப்பதால் நூல் நிலையம் பற்றி ஏதேனும் முடிவுகளை தனித்து எடுத்து விடுவார் - அவர்களுடைய அழுத்தங்களின் காரணமாக எனவே அவருடன் கதையுங்கள்” என்றார். நானும் முதல்வரின் தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டு “ஏதேனும் திறப்புவிழா முடிவுகள் எடுப்பதாயிருந்தால் இறுதி முடிவு எமது சபையின் முடிவாக இருக்கும். அதை அவர்களிடம் தெளிவுபடுத்தும்படி கூறி முடிந்தால் எல்லா உறுப்பினர்களுடனும் ஒரு ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியபொழுது முதல்வர் தொலைபேசியை திடீரென “கொஞ்சம் பொறுங்கள் - இவருடன் பேசுங்கள்” என்று கூறியபடி திரு. இளம்பரிதியிடம் தொலைபேசியைக் கொடுக்க அவரும் தான் இன்னார் பேசுவதாகத் தெரிவித்து என்னை விளித்தார். நானும் எனது பெயரைத் தெரிவித்து முன்பு முதல்வரிடம் கூறிய கருத்தை திருப்பிக்கூறி “எல்லா உறுப்பினர்களுடனும் கதைக்கலாம் தானே?” என்று வினவினேன். அதற்கு அவர் “கூட்டணி உறுப்பினர்களுடன் மட்டும் பேச விரும்புவதாகவும் ஏனையோர் தம்மைப் பொறுத்த மட்டில் தேச விரோதிகள்” என்று கூறும்போது, பக்கத்திலிருந்த திரு. சுபத்திரன் அவர்களும் - “தாங்களும் அவர்களுடன் பேச வேண்டிய அவசியமில்லை நீங்கள் வேண்டுமானால் பேசுங்கள்” என்று கூறியதைத் தொடர்ந்து நான் போவதற்கு ஒத்துக்கொண்டு உறுப்பினர் கூடத்திலிருந்து முதல்வரது அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது அவர்களி;ல் ஒருவர் வெளியே நின்றிருந்ததை அறியாது நான் உள்ளே செல்ல முயன்றபோது என்னை மறித்து “நீர் யார்? முகுந்தனா?” என்று கேட்டபொழுது “ஓம்” என்று கூற உள்ளே கூட்டிச் சென்றார். வேறு எவரும் உள்ளே வரவில்லை. நான் உள்ளே சென்றபொழுது முதல்வருக்கு முன்பாக திரு. இளம்பரிதியும் அவரின் இரு புறமும் இருவரும் மொத்தம் மூவர் அமர்ந்திருந்தார்கள். நான் முதல்வருக்கு இடப்புறமாக இருந்த இரண்டாவது கதிரையில் அமர்ந்தேன். என்னைக் கூட்டிவந்தவர் எனக்கும் முதல்வருக்குமிடையிலிருந்த முதற் கதிரையில் அமர்ந்தார். நானும், முதல்வரும் மாநகர சபைப் பிரதிநிதிகளாகவும், அவர்கள் நால்வர் அரசியற்பிரிவாகவும் பேசஆரம்பித்தோம். நான் பேச முன்னர் நீதியையும், தர்மத்தையும், ஜனநாயகத்தையும் வலியுறுத்த இருப்பதைத் தெரிவித்த பின்பே இவர்களுடன் பேச்சை ஆரம்பித்தேன். பொதுமக்களிடமிருந்து குறிப்பாக வர்த்தகர்களிடமிருந்து வரி அறவிடுவது ஏ9 பாதையூடாக வரும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் வரி அறவீடுகள் மற்றும் விசாரணைகள் பற்றியும், மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் மகோற்சவ காலத்தின்போது நல்லூர் பிரதேச சபையின் தலையீட்டை ஏற்படுத்தியமை, மானிடத்தின் ஒன்றுகூடலில் முதல்வரை அழையாது அவமதித்ததுடன் ஓரிரு நாட்களின் பின் கிராம அலுவலர்களது உந்துதலால் மாநகர சபை உறுப்பினராகிய கௌரவ. ச.அரவிந்தன் அவர்களை அழைத்ததுடன் பிரதி முதல்வர் என்ற தவறான கருத்து பரவுவதற்கு காரணமாயிருந்தமை, வீதிகள் செப்பனிடுவதற்குத் தேவையான கற்கள், மணல் போன்றவை கிடைப்பதற்கு தாமதத்தை ஏற்படுத்தும் தலையீடுகள் போன்றவை குறித்தும், முக்கியமாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர். அ. அமிர்தலிங்கம் அவர்களைத் துரோகி என பிரச்சாரம் செய்வது பற்றியும் இது தவறென்றும் அவரது வீட்டிலிருந்த சகல ஆவணங்கள் மற்றும் Áலகத்திலிருந்த புத்தகங்கள், அவரது வாழ்வின் முக்கிய சம்பவங்கள் கொண்ட புகைப்படங்கள் யாவும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் 1987ல் முற்றாக எரிக்கப்பட்டதும் இதைச்செய்தபின் இன்றைய Áல்நிலையத்தைப்பற்றி பேச எதவித அருகதையும் கிடையாது எனவும் ஆணித்தரமாக எடுத்தக் கூறினேன். ஆனால் அவரும் தொடர்ந்து அமிர்தலிங்கம் துரோகி என்று இரண்டு தடவைகளுக்கு மேல் குறிப்பிட்டார். ஒரு மனிதனின் சரித்திரத்திற்கு ஆதாரமான ஆவணங்களை அழித்துவிட்டு எதுவும் பேசலாம். ஆனால் உண்மை ஒரு போதும் அழியாது. நான் அவரது பெறாமகன் ஒருபோதும் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன். நீங்கள் சொல்வதை நியாயப்படுத்துவீர்கள். நானும் எனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இது எமக்கிடையில் இன்னும் விரிசலை ஏற்படுத்தும் எனவே இதை இந்தளவில்; விட்டு விடுவோம் என்று கூறினேன்.

ஜனநாயக முறையில் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 4 கட்சிகள் மாநகர சபையை நிர்வாகித்து வருவதுடன் கடந்த 5 வருடங்களில் 2 முதல்வர்களையும் ஒரு சபை உறுப்பினரையும் பலிகொடுத்து இம்மாநகர சபை இயங்கிவருகின்றது. தேச விரோதக் கும்பல் எனக் குறிப்பிடும் ஏனைய 3 கட்சிகளும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். இம்முறை பொதுத் தேர்தலில் கூட ஈபிடிபி தோல்வியடையவில்லை. கடந்த தேர்தலில் பெற்ற வாக்ககளை விட 10,000ற்கும் மேல் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கையில் அவர்களை நாம் மாநகரசபை விடயத்தில் எதிர்க்க முடியாது எனவும் எமக்கு 9 பிரதிநிதிகள் மட்டும் தான் என்றும் அவர்கள் மொத்தம் 14 பேர் எனவும் கடந்த 5 வருடங்கள் நாம் ஒன்றாகவே எதுவித எதிர்ப்புமின்றி சபை விடயங்களை முன்னெடுத்துச் சென்றதையும் குறிப்பிட்டேன்.

நூலகம் திறக்கும் ஏற்பாட்டைக் கைவிடுமாறும் இல்லையெனில் 1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்தது போன்ற சமபவங்கள் ஏறபடும் எனவும், ரத்தக்களரி ஏற்பட்டு பிணங்களைச் சந்திக்க வேண்டியேற்படும் என்றும் கூறியபோது நான் மிகவும் கோபப்பட்டு நூலகம் திருத்தப்பட்ட போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? அதைத் திருத்தி முடிந்தபின் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் எல்லாம் அச்சிட்டு நாளை திறக்கப்பட இருக்கின்றபோது இன்று வந்து தடுப்பது நியாயமாகாது எனவும், யாழ்ப்பாணத் தமிழனுக்கு இருக்கும் ஒரே சொத்து அறிவுதான் என்றும், அந்த அறிவைப் பெறுவதற்கான ஒரு நூல் நிலையத்தால் இரத்தம் சிந்தப்படுவதை எந்த ஒரு அறிவுள்ளவனும் ஏற்க மாட்டான் எனவும் நாளை நாம் பதவியிலிருந்தாலே திறக்க முயற்சிப்போம் - எமக்கு அந்தப் பதவிகள் தேவையில்லை என்று கூறி உங்களால் முடிந்தால் சுடுவீர்கள் அதற்காக நான் பயப்படப் போவதில்லை – உண்மையைச் சொல்லவேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்றும் சொன்னேன். இவருடன் கூட இருந்த வேறு மூவருக்கு முன்பு நான் எதிர்த்துப் பேசியதை விரும்பாமலோ என்னவோ பல தடவை என்னைப் பேசவிடாது தடுத்தார். ஆனால் நானும் கடுமையாக எனது கருத்தையும் கேட்க வேண்டும் என மேசையில் தட்டி வாதிட்டதுடன் எனது கருத்துக்களைச் சற்றுத் தொனியை உயர்த்தி அழுத்தமாகக் கூறினேன். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு தடவை அவர் சட்டென்று எழுந்த நின்று பின் இருந்தார். இறுதியாக தாம் முதல்வருடன் தனியாகப் பேச வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்த நான் மாத்திரம் வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஊடகவியலாளர்கள் என்னிடம் செய்தி கேட்க வந்தபோது நான் ஆத்திரத்துடன் உங்களிடம் கூற எனக்கு ஒன்றுமில்லை – நாம் தந்த செய்திகளைப் பிரசுரிக்காது இப்போது என்ன செய்தி வேண்டியிருக்கு என்று சொல்லிவிட்டு உள்ளே என்ன நடக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த மாநகர சபை ஊழியர்களிடம் நாளை திறப்பு விழா நடைபெறாது நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள் என்று கூறிவிட்டு எனது இராஜினாமாக் கடிதத்தை தயாரிப்பதற்கு தட்டெழுத்தாளர்கள் இருந்த இடத்திற்குச் சென்றேன். மாலையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நாம் பதவி விலகுவதாக அறிவித்தது யாவரும் அறிந்ததே!

14.02.2003 வெள்ளிக்கிழமை –“யாழ். பொதுநூலக திறப்புவிழா திடீர் ரத்து இரவோடு இரவாக நூலக சாவிக் கொத்து அபகரிப்பு – யாழ். மேயர் கந்தையன் இளம்பரிதி சந்திப்பு மேயர் உட்பட உறுப்பினர் அனைவரும் பதவிதுறப்பு” என்ற வீரகேசரி தலைப்புச் செய்தியில் உள்ளே “இதே வேளை நேற்றுக்காலை யாழ் மேயர் எஸ்.கந்தையன் யாழ் மாநகரசபைக் கட்டிடத்தில் உறுப்பினர் முகுந்தனுடன் தமது அலுவலகத்தில் தங்கியிருந்தவேளை விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் இளம்பரிதி அங்கு பிரசன்னமானார். அவரை வரவேற்ற மேயர் பின்னர் அவரை தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார். உறுப்பினர் முகுந்தனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர். மாநகர ஊழியர்கள் யாரும் உள்ளே புகுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறிதுநேரத்தின் பின்னர் இளம்பரிதி மேயருடன் வெளியே வந்தார். பின்னர் சென்றுவிட்டார்.”

தினமுரசு வாரமலர் பெப்.23 – மார்ச் 01,2003 இன் 5ஆம் பக்கத்தில் வெளியான “மூடிய அறைக்குள் நடந்த உண்மைகளைத் திறக்கிறார் கந்தையன்” என்றும் “நூல் நிலையம் திறப்பதை நிறுத்தி விடுங்கள் - மீறித் திறந்தால் பிணங்களைச் சந்திக்க வேண்டிவரும்” என்று சொன்னார் இளம்பரிதி” என்றும் தலைப்பிட்ட பேட்டியில் “மூடிய அறைக்குள் உண்மையில் என்ன நடந்தது?” என்ற கேள்விக்கு அவரது பதில் “இளம்பரிதியும் வேறு இருவரும் என்னைச் சந்திக்க வந்தார்கள். எனது சக உறுப்பினரான தங்க முகுந்தன் என்பவருடன் நான் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டேன்.

நூல் நிலையம் திறக்கும் முயற்சியைக் கைவிடுமாறும் இல்லையென்றால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் இளம்பரிதி எச்சரித்தார். மீறித் திறந்தால் பல பிணங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று கூறினார். முகுந்தனுக்கும் இளம்பரிதிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இளம்பரிதி தனது கதிரையை விட்டு வேகமாக எழுந்து தனது கோபத்தைக் காட்டினார்” என்றிருக்கிறது.

இதேபோல த ஐலன்ட் பத்திரிகையிலும், “Global community must take note of Jaffna situation” என்ற முதற் பக்கத் தலையங்கத்தின் தொடர்ச்சியில் 5ஆம் பக்கத்தில் “.....Mayor Kandaiyah said that he had complained to the foreign human right representatives in Jaffna about threats to their lives and they had directed that all 23 members be provided extra security. He told the problem started last Thursday when LTTE Political Leader for Jaffna Ilamparithy called on him at the council around 10.30am. He was accompanied by four other LTTErs. When I asked him whether to invite other members he told me to call any TULFer and no one else. I invited councillor Thanga Mukunthan and a heated argument broke out between him and the LTTE’s Ilamparithy. Jaffna leader warned that if we disobey them we will have to face severe consequences. He warned us not to have a repeat of Ulage Tamil Arachchi Conference of 1974 where 10 innocent Tamils were massacred. ......”என்றிருக்கிறது!

யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் குழு அறிக்கையில் The Jaffna Public Library: Closing Minds & Rivers of Blood .......On the 13th Morning, the day after the Manipay incident, Ilamparithy (alias Aanjeneyar), the LTTE’s Jaffna political chief, walked into the Council and sought a meeting with the Mayor. The Mayor talked to Ilamparithy in the presence of Muhunthan, a young TULF councillor. We give the essence of the exchange as gathered from reliable sources. Ilamparithy told the Mayor that the Leader (Prabhakaran) wants them to stop the opening, and failure to comply will land them in the ‘other’ list [i.e. of ‘traitors’]. The Mayor stuck to his position of being bound by the collective decision of the Council to open the library on the 14th. Ilamparithy raised objections to the participation of councillors from ‘traitor’ groups. The Mayor stood by those with whom he had jointly run the Council. Then Muhunthan chipped in, “Apart from other TULF leaders, you killed Mayors Sarojini and Sivapalan and placed so many obstacles before the Council. What moral right have you now to stop us opening the Library?” “Those killed were all traitors”, replied Ilamparithy. “We cannot accept that, nor will the people”, rejoined Muhunthan. Ilamparithy delivered a blunt parting shot, “If you go ahead with the opening, there will be a blood bath as happened at the International Tamil Conference in 1974…It may be far worse leading to many more deaths [than the 9 then].” ......என்றிருக்கிறது!