வியாழன், 30 ஜூன், 2016

ஜாக்சன் துரை” கலை இயக்குனர் T.N கபிலன் - ஓர் ஈழத்தமிழர்


இலங்கையில் தயாரிக்கப்பட இருக்கும் சிங்கள தமிழ் மொழியில் “ரவீந்திரன்" எனும் திரைப்படத்திற்கு காட்சி அமைப்புக்களைத் தெரிவு செய்யும் கலை இயக்குனராக T.N. கபிலன் பதிவாகியுள்ள நிலையில் ஆடி முதலாந்திகதி வெளிவரும் பிரமாண்டமான நகைச்சுவையும் திகிலும் கலந்த "தரணீதரன்" இயக்கி "சத்யராஜ்" மற்றும் "சிபிராஜ்" நடிக்கும் “ஜாக்சன் துரை” திரைப்படத்துக்கும் கலை இயக்குனராக பணிபுரிந்திருப்பது ஈழத்தமிழராகிய எமக்கெல்லாம் பெருமையளிக்கிறது! இத்திரைப்படம் தெலுங்கிலும் “டோரா” என அதே நாளில் வெளிவருகிறது!

திரைப்படம் ஒன்றை சாதாரணமாகப் பார்க்கும் நாம் நடிகர் நடிகைகளின் நடிப்பை மாத்திரமே உற்றுக் கவனிப்போம்! இவற்றுக்கு மேலாக திரைப்படத் தயாரிப்பில் பல முக்கிய கட்டங்களை அறியும் ஆவல் எமக்குக் கிடையாது! அதனை எண்ணியும் பார்ப்பதில்லை!

திரைப்படம் ஒன்றுக்கு மூலமான கதையை எழுதி இது வேறொருவருடையதாயின் அதற்கான உரிமைகளைப் பெற்று படம் எடுக்க வேண்டிய நிதியை ஒதுக்கீடுசெய்து, படிப்பிடிப்புக்கு நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து, பின்னர் படக்குழுத் தெரிவு - இடம் மற்றும் காட்சி அமைப்புக்கள் உருவாக்கம் போன்றவற்றின் பின் எடுக்கப்பட்ட காட்சிகளை பொருத்தி தொடுத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டு விநியோகிஸ்த்தர்கள் மூலம் திரையரங்கில் திரைப்படம்வெளிவருகிறது! அத்தோடு குறுந்தகடுகளில் ஏற்றப்பட்டு தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படுகிறது!

திரைப்படங்களிலும் சரி, தொலைக்காட்சி மற்றும் நாடகங்களிலும் சரி காட்சிக்கான சூழலை வடிவமைத்து ரசிகர்களை கதைக்குள் கொண்டு செல்வதில் கலை இயக்குனர்களுக்கு முக்கிய பங்குண்டு.

இந்திய சினிமாவில் ஏற்கனவே வெளியாகிய வேணு அரவிந் இயக்கிய ஜெயராம் நடித்த “சபாஷ் சரியான போட்டி” “சுந்தரேஸ்வரன்” இயக்கி “பிருத்வி” நடித்த “பதினெட்டாம் குடி எல்லை ஆரம்பம்” “கே. திருப்பதி” இயக்கிய “முத்து நகரம்”, “கே. ஐ. ரஞ்சித்” இயக்கி “அசோக்” நடித்த “கோழி கூவுது” போன்றவற்றிலும் T.N. கபிலன் கலை இயக்குனராக பணியாற்றியதுடன், சின்னத்திரை - விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களான(மெகா) “என் பெயர் மீனாட்சி”, “அவள்”, “பிரிவோம் சந்திப்போம் - 1”, “சரவணன் மீனாட்சி”, “பிரிவோம் சந்திப்போம் - 2”, “தெய்வம் தந்த வீடு”, “புது கவிதை”, “தாயுமானவள்”, “ஆண்டாள் அழகர்” என்பவற்றுக்கும் கலை இயக்குனராகப் பணிபுரிந்தவர் TN. கபிலன்.

நாட்டில் நிலவிய அசாதாராண சூழ்நிலைகளால் 2008இல் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த TN கபிலன் தன் தனித்திறமையால் முன்னுக்கு வந்தவர். இலங்கையின் வடபாகத்தில் கரவெட்டி – துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பையா நவரட்ணராஜா கபிலன் 25 ஆண்டுகாலம் ஓவியப் பணியில் ஈடுபாடுடையவராவார்.

ஜாக்சன் துரை திரைப்படத்தில் 1940களில் நடைபெற்ற பிரிட்டிஷ் - இந்திய யுத்தச் சூழலை தனது அபார கற்பனைத் திறனைக் கொண்டு கபிலன் காட்சிகளை அமைத்திருப்பது வியப்புக்குரியது!

ஒரே இடத்தில் 11 வித்தியாசமான காட்சி அரங்குகளை ஏற்படுத்தி பண விரயத்தைத் தடுத்து தன் வித்தையைச் செய்து அனைவரதும் பாராட்டைப் பெற்றிருக்கும் கலை இயக்குனர் T.N. கபிலன் மேன்மேலும் வளர்ந்து சிறந்த ஒரு கலை இயக்குனராக மிளிர வேண்டுமென்பதே ரசிகர்களது எதிர்பார்ப்பாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக